ஒரு நாடு அதன் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமென்றால் சிறந்த வணிக யோசனைகள் மற்றும் புதுமையான தொழில் நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டும். இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. ஆனால், நமது நாட்டில் கல்வித்தரம் வீழ்ச்சியடைந்ததால், பொறியியல் கல்லூரிகள் வேலையற்ற பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக மாறிவிட்டது. இதுதொடர்பாக, பி.டெக் மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் ஊக்கமளிப்பதற்காக தெலங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு கே.டி.ஆரின் பரிந்துரை தீவிரமாக பரிசீலிக்கத்தக்கது.
படைப்பாற்றல் மற்றும் புதிய யோசனைகள் ஊக்குவிக்கப்பட்டால், அற்புதமான தொழில்கள் உருவாகலாம். இதை ஒரு நம்பிக்கையாக வைத்திருப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு மாநிலமும் அதை நோக்கி முன்னேற ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி நினைத்தபடி, ஆத்ம நிர்பார் பாரத் நிறைவேற்றப்பட வேண்டுமானால், அரசாங்கத்தின் தரப்பில் இன்னும் அதிகம் செய்ய வேண்டியிருக்கிறது. இன்றைய தொடக்கநிலை நிறுவனங்களை நாளைய பன்னாட்டு நிறுவனங்களாக மாற்றுவதற்கான பிரதமரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அதிகமாக செய்ய வேண்டும்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற தொழில்முனைவோர் மற்றும் தொழில் துறை உச்சிமாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களின்படி, இது போன்ற வியக்கத்தக்கவற்றை செய்ய நம்பிக்கை, ஊக்கம் மற்றும் முதலீடுகள் மிக முக்கியமானவை. தொழில் முனைவோரின் புதுமையான யோசனைகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு, அவர்களின் நிறுவனங்களுக்கான நிதியுதவி உறுதி செய்யப்பட்டால், எந்தவொரு சவாலையும் எளிதில் சமாளிக்க முடியும்.
கோவிட்-19 நெருக்கடி, நம் நாட்டில் ஏராளமான தொடக்க நிறுவனங்களின் நோக்கங்களை தகர்த்துள்ள நிலையில், அண்டை நாடான சீனா, அதே காலகட்டத்தில் உலகின் உற்பத்தித் தொழில்களின் மையமாக உருவெடுத்துள்ளது. அவ்வப்போது வளரும் தொழில் நுட்ப வாய்ப்புகளையும் சீனா பயன்படுத்திக் கொள்கிறது. நாட்டிற்குள் வேலை தேடுபவர்களை விட வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடியவர்களை ஊக்குவிப்பதே குறிக்கோள் என்று நமது அரசாங்கங்கள் கூறி வருகின்றன. புதிய யோசனைகளை ஊக்குவித்து, அதனை மேம்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் திட்டங்களுக்கு அரசாங்கங்கள் முன்னுரிமை அளிக்கும்போதுதான் நாட்டில் நிலைமை மேம்படும்.