உத்தரபிரதேசம்:உத்தரப்பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் மால்தேபூரில் இன்று(மே.22) அதிகாலையில், கங்கை நதியின் கரையில் உள்ள கோவிலுக்கு பக்தர்கள் படகில் சென்றுள்ளனர். ஒரு படகில் சுமார் 40 பேர் சென்றதாகத் தெரிகிறது. அப்போது, படகு எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. படகில் இருந்தவர்கள் நீரில் விழுந்து தத்தளித்தனர். சிலர் நீந்தி கரைக்கு வந்ததாகத் தெரிகிறது.
நீரில் சிக்கித் தவித்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீனவர்கள் நதி நீரில் தத்தளித்த சிலரை பத்திரமாக மீட்டனர். அதேநேரம், இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவம் நடந்த கங்கை நதிக்கு வந்தனர்.
மீட்புப் படையினர் நீரில் மூழ்கியவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட பலரும் சுயநினைவில்லாமல் இருந்ததாகத் தெரிகிறது. பல்லியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பெண்கள் உயிரிழந்துவிட்டனர். இளைஞர் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பிற்பகல் நிலவரப்படி மேலும் 24 பேர் நதியில் மூழ்கி மாயமானதாக தெரிகிறது. அவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பலர் காணாமல் போனதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. படகில் அதிகமான பயணிகளை ஏற்றிச்சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் நடந்த கங்கை நதிக்கரையில் மாவட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மீட்புப் பணிகளையும் ஆய்வு செய்தனர்.