ராஞ்சி: இன்று காலை சுமார் 8.45 மணியளவில் ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டத்திலுள்ள ஹோயஹத்து கிராமத்தில் பயங்கர ஆயுதம் வெடித்து விபத்து ஏற்பட்டது. அப்போது, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஜார்கண்ட் மாநில சிறப்பு காவலர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
பயங்கர ஆயுதம் வெடித்து 3 சிறப்பு காவலர்கள் உயிரிழப்பு
ஜார்கண்டில் பயங்கர ஆயுதம் வெடித்து ஏற்பட்ட விபத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று சிறப்பு காவல் துறையினர் உயிரிழந்ததாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அம்மாநில காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில், இந்த வெடிவிபத்தில் சிக்கி, ஹர்த்வார்ஷா, கிரன் சுரின் என்ற இரு காவலர்களும், தேவேந்திர குமார் பண்டிட் என்ற தலைமைக் காவலரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும், படுகாயமடைந்த வீரர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் கூறினர்.
ஜார்கண்ட் டிஜிபி நீரஜ் சின்ஹா வெடிவிபத்து நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இந்த விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில், காவல் துறையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.