டெல்லி :நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில், 2021ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் தினம் அனுசரிக்கப்பட்டது.
தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்ற நிலையில், அவையின் பார்வையாளர்கள் பகுதியில் இருந்து மக்களவை எம்.பி.க்கள் இருப்பிடத்திற்குள் குதித்து களேபரத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். இந்த பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக கர்நாடக மாநிலம் பாகல்கோட் பகுதியை சேர்ந்த மென் பொறியாளரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கடந்த டிசம்பர் 14ஆம் தேதி அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக மக்களவையில் 13 எம்.பிக்களும், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியும் நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 18ஆம் தேதி ஒரே நாளில் மக்களவையில் 33 எம்.பிக்களும், மாநிலங்களவையில் 45 உறுப்பினர்களும் என ஒட்டுமொத்தமாக 78 எம்.பிக்கள் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தததாக கூறி இடைநீக்கம் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற வரலாற்றில் ஒருநாளில் அதிகபட்சமாக எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இருந்து மட்டும் இதுவரை 143 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தனர். இந்நிலையில், இன்றும் (டிச. 21) மக்களவையில் மூன்று எம்,பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் எம்.பிக்கள் தீபக் பாஜி, டி.கே சுரேஷ், நகுல் நாத் ஆகியோர் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி சபாநாயகர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டர்.
முன்னதாக கடந்த டிசம்பர் 20ஆம் தேதி தாமஸ் சாழிக்காதன், ஏ.எம் ஆரிப் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று (டிச. 21) மேலும் மூன்று பேர் இடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடப்பு நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் தலைமை தேர்தல் ஆணையர் நியமன மசோதா, காஷமீர் மறுசீரமைப்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், தேதி குறிப்பிடப்படமால் மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க :மீண்டும் சிக்கலில் ராகுல் காந்தி! சர்ச்சை பேச்சு விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு! தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன?