ஜம்மு:காங்கிரஸ் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால், குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகினார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸில் இருந்த முக்கியத்தலைவரான குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்தது அக்கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு மறுப்புத்தெரிவித்த குலாம் நபி ஆசாத், புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் காங்கிரஸில் இருந்து விலகி, ஆசாத்துடன் இணைந்தனர்.
இந்த நிலையில், குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஜம்மு காஷ்மீரில் மேலும் மூன்று காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் முன்னாள் துணை சபாநாயகர் குலாம் ஹைதர் மாலிக், முன்னாள் எம்எல்சிக்கள் சுபாஷ் குப்தா, ஷாம் லால் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
இதனிடையே ஜம்மு காஷ்மீர் முன்னாள் துணை முதலமைச்சர் தாரா சந்த், முன்னாள் அமைச்சர்கள் அப்துல் மஜித் வானி, மனோஹல் லால் சர்மா, குரு ராம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ பல்வான் சிங் ஆகியோரும் டெல்லியில் குலாம் நபி ஆசாத்தை சந்தித்தனர். இவர்களும் காங்கிரஸில் இருந்து விலகிய பிறகு, ஆசாத்துடன் கைகோர்ப்பார்கள் என்றும், நாளை இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:காங்கிரஸில் இருந்து வெளியேறும் கட்டாய நிலைக்குத்தள்ளப்பட்டேன்... குலாம் நபி ஆசாத் பேட்டி...