சண்டிகர்: ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நடிகையும் பாஜக மகளிரணி நிர்வாகியுமான சோனாலி போகத் (42) கோவாவில் ஆகஸ்ட் 22ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த திடீர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தார் கோவா போலீசாரிடம் புகார் செய்தார். அதனடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது.
சோனாலி போகத்தின் உதவியாளர்கள் சுதிர் சக்வான், சுக் விந்தர் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருளை உட்கொள்ள சோனாலியை வற்புறுத்தியதாகவும், அதனால் அவர் அதிக்கப்படியான போதைப்பொருளை உட்கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
இந்த நிலையில் வழக்கு தொடர்பாக சண்டிகரில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளர் ஜிவ்பா தல்வி கூறுகையில், பார் உரிமையாளர் எட்வின் நூன்ஸ், போதைப்பொருள் விற்பனையாளர்கள் தத்பிரஷாத் கோன்கர் மற்றும் ராம மாந்த்ரேகர் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சோனாலிக்கு கொடுக்கப்பட்ட போதைப்பொருளான மெத்தாம்பேட்டமைன் விற்பனை குறித்த விசாரணையில் மூவரும் சிக்கினர். அவர்கள் மீது போதைப்பொருள் மருந்துகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதனிடையே ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் நேற்று (ஆகஸ்ட் 27) போகத்தின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அத்துடன் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:உயிரிழந்த பாஜக பெண் நிர்வாகி பாலியல் வன்புணர்வுக்கு ஆளானாரா... உடற்கூராய்வு அறிக்கை கூறுவது என்ன?