தெலங்கானா:தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரே பெயர் கொண்ட மூன்று தோழிகள் பற்றிய சுவாரஸ்யத் தொகுப்பை இங்கு காண்போம்.
தெலங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் உள்ள லோகேஸ்வரம் மண்டலத்தைச் சேர்ந்த தோழிகள் மோரி மௌனிகா, சிப்புலா மௌனிகா, குந்த மௌனிகா. இவர்கள் மூவரும் சாரதா வித்யாமந்திர் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்துள்ளனர்.
அதன்பின், மூவரும் வேளாண்துறை சார்ந்த டிப்ளமோ படிப்பை வெவ்வேறு நிறுவனங்களில் படித்தனர். எம்.மௌனிகா ருத்ரூரில் உள்ள சி-டெக்னாலஜி பாலிடெக்னிக் கல்லூரியிலும், எஸ்.மௌனிகா மேடக்கில் உள்ள கல்லூரியிலும், கே.மௌனிகா டாக்டர். ராமாநாயுடு வேளாண்மை டிப்ளமோ கல்லூரியிலும் 2016ஆம் ஆண்டு படித்து முடித்தனர்.
டிப்ளமோ முடித்த அவர்கள் தெலுங்கானா மாநில அரசுப்பணியில் சேர விரும்பி அரசு தேர்வெழுதினர். இதில் மூவரும் தேர்வாகி ஒரே இடத்தில் பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.
தற்போது தோழிகள் மூவரும் 'கச்சந்தா கிளஸ்டர்' என்ற இடத்தில் வேளாண்துறை சார்ந்த அலுவலராக (Agriculture Extension Officer) பணிபுரிந்து வருகின்றனர்.
தெலங்கானாவில் ஒரே பெயரைக் கொண்ட மூன்று தோழிகள் இதுகுறித்து மூன்று 'மௌனிகா'களும் கூறுகையில், "நாங்கள் ஒரே பள்ளியில் படித்தோம். இப்போது ஒரே அலுவலகத்தில் பணிபுரிகிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அலுவலகத்திற்கு வருபவர்கள் எங்கள் பெயரால் குழம்பிவிடுவார்கள். நாங்கள் படித்த பள்ளி அலுவலகத்திற்கு அருகில் தான் உள்ளது. நாங்கள் அடிக்கடி அங்கு சென்று ஆசிரியர்களிடம் பேசி, எங்களது பள்ளிப்பருவத்தை நினைவுகூர்வோம். ஆசிரியர்கள் எங்களைப் பார்த்து பெருமைப்பட்டார்கள். எங்களை வாழ்த்தினார்கள்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஹிஜாப் தடை: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு