ஹைதராபாத்(தெலங்கானா):உண்மையை உரக்கச் சொல்வதில் செய்தித்தாள்கள் உள்ளிட்ட ஊடகங்களின் பங்கு மகத்தானது. அரசின் நடவடிக்கைகள், அவற்றின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை விளக்குவதன் மூலம் ஒரு செழுமையான ஜனநாயகத்தை சுதந்திரமான ஊடகங்கள் உயிர்ப்புடன் வைத்துள்ளன. 'மீடியா ஒன்' என்ற மலையாள செய்தி சேனலுக்கு மத்திய அரசு விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் நீக்கியது. போதிய ஆதாரங்கள் இன்றி தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் உரிமைகளை நசுக்கக் கூடாது என்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி இருந்தது. இருப்பினும், பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான சில முற்றுகைகள் ஏதேவொரு வகையில் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. இதற்கு சான்றாக சமீபத்தில் பத்திரிக்கை சுதந்திரத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது.
டெல்லியுள்ள 'நியூஸ்க்ளிக்' என்ற செய்தி இணையதளத்தின் அலுவலகங்கள் மற்றும் அதன் பத்திரிக்கையாளர்களின் வீடுகளில் கடந்த 3ஆம் தேதி டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிறுவன ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா (76) மற்றும் மனிதவள அமைப்பின் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, 2009 ஆம் ஆண்டு முதல் விமர்சனங்களை வெளியிடும் இப்பத்திரிக்கை அலுவலகத்தின் பல மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, விதிமுறைகள் மீறல் என அலுவலகத்திற்கும் போலீசாரால் சீல் வைக்கப்பட்டது.
விமர்சனங்களுக்கு முன்னுரிமை தரும் உன்னத நோக்கத்துடன் நிறுவப்பட்ட இந்த 'நியூஸ்க்ளிக்' நிறுவனம், ஆளும் நிர்வாகத்திற்கு எதிராக வைக்கும் விமர்சனங்களால் அவர்களுக்கு இடையூறாக இருந்துவந்ததாக கூறப்படுகிறது. விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டங்களின் தொகுப்பு குறித்த செய்திகளும் இதில் அடங்கும். இதனிடையே, பத்திரிக்கை சுதந்திரம் குறித்து முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, 'தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் குறைபாடுகளை ஒரே மாதிரியாக வெளிப்படுத்துவதற்கு ஒரு சக்திவாய்ந்த கருவி 'பத்திரிகை'யாகும் எனவும், தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், 'ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டு தணிக்கை செய்யப்பட்டால், உண்மை மறைக்கப்பட்டு, ஜனநாயகத்தின் மாண்புக்கு களங்கம் ஏற்படும்' எனவும் குறிப்பிட்டிருந்தனர். இவ்வேளையில், சமீபத்தில் 'நியூஸ்கிளிக்' நிர்வாகம் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக டெல்லி போலீசார் எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள், பத்திரிகைகளின் அடிப்படை சுதந்திரத்தின் மீதான கடுமையான அத்துமீறலைப் பிரதிபலிக்கிறது.
'நியூஸ்க்ளிக்' செய்தி நிறுவனத்தின் மீதான இந்த நடவடிக்கை பிற ஊடகங்களுக்கும் இதேபோன்ற அச்சுறுத்தல் தரும் நடவடிக்கையாக அமையக்கூடும். 2 ஆண்டுகளுக்கு முன்பு, அமலாக்கத்துறை(ED), வருமான வரித்துறை மற்றும் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள், இதே 'நியூஸ்கிளிக்' ஊழியர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் பணமோசடி என சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். அப்போது பல மடிக்கணினிகள், தொலைபேசிகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டத்தோடு, நிறுவனத்தின் பண பரிவர்த்தனைகள் போன்றவற்றின் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையும் படிங்க:நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் புர்கயஸ்தா கைது!
இந்தியாவில் சீனா சார்பு நடவடிக்கைகளுக்காக, இந்நிறுவனம் சீனாவிடம் இருந்து நிதி பெறுவதாக குற்றம்சாட்டிய டெல்லி போலீசார், நியூஸ்கிளிக்' செய்தி நிறுவனம் மீது கடுமையான 'சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்' (UAPA) கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தது. முன்னதாக, குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்களை நீதிமன்றத்தில் அளிக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். இதனால், அரசாங்கம் ஊடகங்களின் விமர்சனத்தை ஒரு தேசத்துரோக செயலாகவும், தேச விரோதப் பிரச்சாரமாகவும் கருதுவதாகவும், இது அரசு தனக்கெதிரான எதிர் குரல்களை தேடிக் குறிவைக்க வழிவகுப்பதாகவும் பார்க்கப்படுகிறது. இதனிடையே, 2021 ஆம் ஆண்டில், 'நியூஸ் கிளிக்' மற்றும் அதன் ஆசிரியர்களான பிரபீர் புர்காயஸ்தாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் தலையிட்டு, அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.