நாக்பூர்:மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தொலைப்பேசியில் மிரட்டல் விடுத்ததாகக் கைது செய்யப்பட்ட ஜெயேஷ் பூசாரிக்கும், தற்போது கர்நாடக சிறையில் உள்ள அப்சர் பாஷாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதை மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும், பெங்களூரு தீவிரவாத தாக்குதல் வழக்கில் இருவருக்கும் தொடர்புடையது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் மக்கள் தொடர்பு அலுவலகத்துக்கு ஒரு கொலை மிரட்டல் வந்தது. தொலைப்பேசியில் பேசிய மர்ம நபர், தாம் தாவூத் இப்ராகிமின் கும்பலைச் சேர்ந்தவர் என்றும் நிதின் கட்கரி ரூ.100 கோடி தரவேண்டும். தர மறுத்தால் அவரை கொன்றுவிடுவோம் என்று மிரட்டி தொலைப்பேசியை வைத்துவிட்டதாகத் தெரிகிறது. அந்த நேரத்தில் பூஜாரி கர்நாடக மாநில சிறையில் வைக்கப்பட்டிருந்தாக போலீசார் கூறினர்.
பின்னர், மார்ச் 21 ஆம் தேதி தொலைப்பேசி மூலம் நிதின் கட்கரிக்கு மற்றொரு கொலை மிரட்டல் வந்தது. இந்த முறை தொலைப்பேசியில் பேசியவர், பா.ஜ.க. எம்.பி.யான நிதின் கட்சி ரூ.10 கோடி தரவேண்டும். அவர் தர மறுத்தால் கொன்றுவிடுவோம் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே நிதின்கட்கரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கடந்த மார்ச் 28 ஆம் தேதி பெலகாவியில் சிறை வைக்கப்பட்டிருந்த பூஜாரியை போலீசார் கைது செய்து நாக்பூருக்கு அழைத்து வந்தனர். அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.