புதுச்சேரி: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. அந்த வகையில், இக்கோயிலின் வரலாறு குறித்து காரைக்கால் தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் குருக்களான சிவாச்சாரியார் கூறுகையில், “திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் நவக்கிரக கோயில்களில் ஒன்றாகும்.
மேலும், தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது. பின்னர், நகவிடங்கபுரம் என்றும் பெயர் பெற்றது. இங்கு அமர்ந்து இருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி. நளமகாராஜனை, சனிபகவானின் பீடிப்பிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால், நள்ளாறு என அழைக்கப்படுகிறது.
சுயம்புவாக தர்ப்பைவனத்தில் தோன்றியதால் ஈசன் தர்ப்பைத் தழும்புகளுடன் காட்சி தருகிறார். இக்கோயில் 9ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகும். பிறகு வந்த விஜயநகர பேரரசர்கள், இக்கோயிலை விரிவுபடுத்தினார்கள். சிவபெருமானின் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று.
சம்பந்தர், சுந்தரர், அப்பர், அருணகிரிநாதர் ஆகியோர் இத்தல சுவாமி பற்றி பாடி உள்ளனர். இத்தலத்தில் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் தவிர, அஷ்டதீர்த்தங்கள் எனப்படும் மொத்தம் 8 தீர்த்தங்கள் உள்ளன. விஷ்ணு, பிரம்மன், இந்திரன், அஷ்டதிக்கு பாலகர்கள், அகத்தியர், அர்ஜுனன், நளன் உள்ளிட்ட பலரும் வழிபட்ட ஈசன் இவர். சப்தவிடங்கத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று.
தேவர்களை மறுத்து, நிடத நாட்டு மன்னன் நளன் சக்கரவர்த்தியை கரம் பிடித்தாள், சேதி நாட்டு இளவரசி தமயந்தி. இதனால் கோபமான தேவர்கள், சனிபகவானின் வழியாக நளனை கடுமையாக சோதித்தனர். எல்லா செல்வத்தையும் இழந்து, இறுதியில் தமயந்தியையும் பிரிந்து, சேவகனாக மாறினான் நளன் சக்கரவர்த்தி.
பின்னர், சகல தோஷங்களும் நீங்க வேண்டி, தான் இழந்த ராஜ்ஜியம், பதவி மற்றும் குடும்பம் இவைகள் மீண்டும் கிடைக்க வேண்டி, கலியுகத்தில் இறுதியாக இருந்த திருநள்ளாற்றில் உள்ள தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, சனீஸ்வரனையும் சரணடைந்தார்.
இந்த ஷேத்திரத்தில் வழிபாடு செய்து அதன் மூலம், தான் இழந்த ராஜ்ஜியம், பதவி மற்றும் குடும்பம், மன சந்தோஷம் இவை அனைத்தும் தர்ப்பாரண்யேஸ்வரர் அருளால் கிடைக்கப் பெற்றார். எனவே, இக்கோயிலின் மூலமூர்த்தியாக விளங்கக்கூடிய தர்ப்பாரண்யேஸ்வரர்க்கு, நளேஸ்வரர் என்ற பெயர் வழங்களாயிற்று.
அதேபோன்று, அவருடைய பெயரில் நளத்திருத்தம் என்ற தீர்த்தம் இந்த ஷேத்திரத்தில் உள்ளது. இதில் பக்தர்கள் நீராடி வழிபடுவதற்கு ஏற்றவாறு அமையப் பெற்று இருக்கிறது. இவ்வாறு மூர்த்தி, தளம், தீர்த்தம் ஆகிய மூன்றும் நரேஷ் நலச்சக்கரவர்த்தியின் பெயரைத் தாங்கிய வண்ணம் உள்ளது.
நளனை பின்தொடர்ந்து வந்த சனீஸ்வர பகவான், தர்ப்பாரண்யேஸ்வரர் பெருமானின் அருளானையின் வண்ணம், கோயிலினுடைய ராஜகோபுரத்தின் இடதுபுறத்தில், காக வாகனத்தில் நின்ற கோலத்தில் அபயஹஸ்தம் என்று சொல்லக்கூடிய அனுக்கிரக திருமுகத்தோடு, கிழக்கு முகம் நோக்கி தனி சன்னதி, தனி விமானம் கொண்டு அருள் பாலித்து வருகிறார்.
நளன் சக்கரவர்த்தி விடுதலை பெற்று திருப்பணிகள் செய்து முடித்து, திருக்கோயில் அமைத்து இறைவனை பூசித்தார். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்ல எண்ணத்தினால், நளன் இறைவனிடத்தில் வரங்களை வேண்டினார். இங்கு என்னைப்போல் சனி பகவானை வந்து வணங்கும் பக்தர்களுக்கு சனிபகவான் அருள் செய்து, துன்பம் போக்கி, நலம் பல செய்திடல் வேண்டும் என்று ஒரு வரம் கேட்டார்.
இரண்டாவதாக இத்தலத்தில் சனிபகவான் அனுக்கிரஹ பார்வை உடையவராக இங்கு இருப்பவர்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்றார். மூன்றாவதாக, இந்த பகுதிக்கு இன்று முதல் மூர்த்தி, தீர்த்தம், திருத்தலம் ஆகிய மூன்றும் என் பெயரில் விளங்கிட வேண்டும் என்றும் வரங்களை வேண்டினார்.