பாட்னா: பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி கடத்தப்பட்டு 6 நபர்களால் 28 நாட்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் சரையா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிஸ்வானியா கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஜூலை 9 ஆம் தேதி கடத்தப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக, சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
அந்த புகார் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி சிறுமியின் தாயாருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் அவரது மகளை சரையா சவுக் பகுதியில் இருந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். அதன் படி இரவு 8 மணி அளவில் அந்த தாய் சரையா சவுக் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு மயக்க நிலையில் தனது மகள் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளார்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில் “கடந்த ஜூலை 9 ஆம் தேதி, 6 பேர் கொண்ட கும்பல் 13 வயதுடைய தனது மகளை (பெயர் குறிப்பிடவில்லை) கடத்தி சென்றுள்ளனர். காரில் வந்த அந்த மர்ம நபர்கள் தனது மகளை அடையாளம் தெரியாத, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர். அங்கு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தனது மகளை 28 நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கூறிய போலீசார், “பாதிக்கப்பட்ட சிறுமி குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருடன் சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் சிறுமி பற்றிய தகவல்களை பேஸ்புக் மூலம் சேகரித்து உள்ளனர். அதன்பின் இந்த கடத்தலை நிகழ்த்தி உள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளார்.