நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கரோனா பரவல் தொடர்ந்து குறைந்துவருகிறது. இருப்பினும், டெல்லியில் கரோனா பரவலின் மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளது மக்களிடையே பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் புதன்கிழமை(டிச.09) 2,463 பேருக்கு கரோனா உறுதி செயய்ப்பட்டது, மேலும் 50 பேர் உயிரிழந்தனர். நவம்பர் 1ஆம் தேதிக்கு பிறகு டெல்லியில் உறுதி செய்யப்படும் மிக குறைந்த அளவு கரோனா வழக்குகள் இதுவாகும்.
அதேபோல சோதனை செய்பவர்களில் கரோனா உறுதி செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் 3.42 விழுக்காடாக குறைந்துள்ளது. இது குறித்து டெல்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தனது ட்விட்டரில், "கரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் தேசிய தலைநகர் வெற்றியை நோக்கி நகர்ந்துவருகிறது" என்று தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், "கரோனா வழக்குகளும், உயிரிழப்புகளும் கடந்த 40 நாள்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. தற்போது இருக்கும் நிலைமை மேம்பட்டுள்ளது. டெல்லியில் கரோனா பரவலின் மூன்றாவது அலை முற்றிலுமாக முடியவில்லை என்றாலும் தொடர்ந்து குறைந்துவருகிறது" என்றார்.