கோவிட் - 19 நிலைமை குறித்து அரசு ஆலோசகர் கே. விஜய் ராகவன் நேற்று (மே 5) செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "மாற்றமடைந்த தொற்று அசலை போலவே பரவுகின்றன. இது மனிதர்களை அதிக அளவில் பாதிக்கிறது. இது மனித உடலில் நுழையும்போது, அசலைப் போலவே அதிக அளவிலான தொற்று நகல்களை உருவாக்குகிறது.
கரோனா மூன்றாம் அலை தவிர்க்க முடியாதது. அதிக அளவு வைரஸ் புழக்கத்தில் இருப்பதால், மூன்றாம் அலை எப்போது நிகழும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. நாம் புதிய அலைகளுக்கு தயாராக வேண்டும். புதிய வகையான மாற்றங்களுடன் வைரஸானது தப்பிக்கும். எனவே, அதை கவனித்துக்கொள்ள விஞ்ஞான ரீதியாக நாம் தயாராக இருக்க வேண்டும்.
தற்போதைய வகைகளுக்கு எதிராக தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்கும். உலகம் முழுவதிலும் புதிய மாறுபாடுகள் எழும். நோயெதிர்ப்பில் ஏற்படும் மாறுபாடுகள், ஒன்று நோய் தீவிரத்தை குறைக்கும் அல்லது அதிகரிக்கும்.
உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இந்த வகையான மாறுபாடுகளை எதிர்பார்த்து, எச்சரிக்கையுடன் முன்கூட்டியே மாற்றியமைக்கப்பட்ட கருவிகளை உருவாக்குவதன் மூலம் விரைவாக தொற்றுக்கு எதிராக செயல்படுகிறார்கள். இது ஒரு தீவிர ஆராய்ச்சி திட்டமாகும். இது இந்தியாவிலும், வெளிநாட்டிலும் நடக்கிறது” என்றார்.