அல்வர்: ராஜஸ்தான் மாநிலம் அல்வர் மாவட்டத்தில் உள்ள கீதானந்த் அரசு மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையில் நேற்றிரவு(பிப்.5) திருடர்கள் புகுந்தனர். அவர்கள் மின்சார வயர்கள், பைப்லைன்கள், மோட்டார்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை திருட முயற்சித்ததாக தெரிகிறது.
அவர்கள் ஆக்சிஜன் சப்ளை பைப்லைன்களை வெட்டியதால், ஆக்சிஜன் படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 20 குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட ஆரம்பித்தது. செய்வதறியாமல் திகைத்த மருத்துவமனை ஊழியர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை சோதித்தனர்.
அப்போது மருத்துவமனையின் பின்புறமிருந்து திருடர்கள் தப்பியோடுவதை மருத்துவமனை காவலாளி பார்த்துள்ளார். அவர் உடனடியாக கூச்சல் போட்டதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து வந்து, இரு திருடர்களையும் பிடித்தனர். அவர்கள் பைப்லைன்களோடு, ஆக்சிஜன் சிலிண்டர்களையும் திருடியதாக தெரிகிறது.