டெல்லி:டெல்லியின் ஜங்புரா பகுதியில் இயங்கி வரும் 'உம்ராவ் ஜூவல்லர்ஸ்' என்ற நகைக்கடையில்தான் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.20 முதல் ரூ.25 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கொள்ளை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து நகைக்கடையின் உரிமையாளர் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை (செப்.24) கடையை மூடியிருந்த நாங்கள், செவ்வாய்க்கிழமை (செப்.26) காலை கடையைத் திறந்தபோது, கடை முழுவதும் தூசி படிந்திருந்தது.
இதையும் படிங்க: விற்பனைக்காக 31 கிலோ சந்தன கட்டைகளை கடத்திய முதியவர்!…வனத்துறையினர் நடவடிக்கை
அப்போதுதான் கடையில் உள்ள நகைகளை பாதுகாப்பாக வைக்கும் லாக்கர் அறையான ஸ்ட்ராங் ரூமின் சுவரில் துளை போட்டு நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இந்த கொள்ளைச் சம்பவத்தில் ரூ.5 முதல் 7 லட்சம் ரொக்கம் உள்பட ரூ.20 முதல் 25 கோடி மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டுள்ளன.
மேலும் கொள்ளையர்கள் சிசிடிவி கண்காணிப்பு கேமராவையும் சேதப்படுத்தி உள்ளனர். எங்கள் ஊழியர்கள் அனைவரும் இங்கேதான் உள்ளனர். கொள்ளையர்கள் கடை அமைந்துள்ள கட்டடத்தின் மொட்டைமாடி வழியாக கடைக்குள் வந்திருக்கலாம்” எனத் தெரிவித்தார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, “ நகைக்கடைக்கு உள்ளே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை கொள்ளையர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதனால் போலீசார் கடைக்கு வெளியே பிற இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்கள் குறித்த அடையாளங்களைக் கண்டறிய முயல்வார்கள். மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களைக் கண்டறிய தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. கொள்ளையில் ஈடுபட்டவர்களை விரைந்து பிடிக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சந்திரபாபு நாயுடுவின் மேல்முறையீடு மனு; நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!