கேரளா மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருடத்திற்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (நவ.16) திறக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, 17ஆம் தேதி முதல் மண்டல பூஜை தொடங்கி 41 நாள்கள் நடைபெறும் தொடர் மண்டல காலம் வரும் டிச.27ஆம் தேதி அன்று புகழ்பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது.
பின் 30ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு மகரவிளக்கு பூஜை தொடங்கும். ஜன.20ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும். நான்கு வருடங்களுக்குப் பின்னர், பக்தர்களை முழு அளவில் வரவேற்க சபரிமலை தயாராகி வருகிறது. கடந்த 2018, 2019 வருடங்களில் கேரளாவில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கட்டுப்பாடுகள் தளர்வு: இதனால் 2 வருடமும் சபரிமலையில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் கரோனா பரவல் காரணமாக 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் 2 வருடங்களிலும் சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. இதன் காரணமாக, கோயில் வருமானமும் குறைந்தது. இதற்கிடையே 4 வருடங்களுக்குப் பிறகு பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முன்பதிவு: இதனால் இந்தமுறை மண்டல காலத்தில் சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கம்போல, அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், அதன் மூலம் பக்தர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. நாள்தோறும் ஒரு லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்து தரிசனம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன.