தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"தமிழக வர்த்தக வளர்ச்சிக்காக விமான நிலையங்களை நவீனப்படுத்த வேண்டியுள்ளது" - திமுக எம்.பி வில்சன்! - திமுக எம்பி வில்சன் பேச்சு

தமிழ்நாட்டின் வர்த்தக வளர்ச்சிக்காக விமான நிலையங்களை நவீனப்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்றும், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் திமுக எம்.பி வில்சன் தெரிவித்துள்ளார்.

the
the

By

Published : Dec 21, 2022, 4:53 PM IST

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்று(டிச.21) மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய திமுக எம்.பி வில்சன், தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களை நவீனமயமாக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

அவையில் பேசிய எம்.பி வில்சன், "தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகள் போக்குவரத்து அதிகளவில் உள்ளது. சென்னை விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் என்றாலும், அது நவீனமானது இல்லை. சென்னை விமான நிலையம் டெல்லி, பெங்களூருக்கு இணையாக இருந்திருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு இல்லை. அதனால் சென்னையின் வர்த்தகம் பாதிக்கப்படுகிறது.

சென்னையை தென்னிந்தியாவின் வர்த்தக மையமாக மாற்றும் வகையில், உலகத்தரத்தில் அதி நவீன வசதிகளுடன் கூடிய இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் விரைவுபடுத்த வேண்டும்.

அதுமட்டுமின்றி மதுரை விமான நிலையத்தை தரம் உயர்த்தவும் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கிறோம். தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை நகரம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கான நுழைவு வாயிலாக உள்ளது.

மதுரையிலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணிகள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், மதுரை விமான நிலையம், துபாய், சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு மட்டுமே விமானவை சேவை கொண்டுள்ளதால், தற்போது வரை சுங்க விமான நிலையமாக செயல்படுகிறது. இதனால் மதுரையில் சர்வதேச சுற்றுலா, ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சி தடைபட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவாக்கம் செய்வது குறித்து பல சர்வதேச விமான நிறுவனங்கள் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் மதுரை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் மற்றும் சிஐஎஸ்எப் வீரர்கள் பற்றாக்குறை உள்ளது. அதை சரி செய்ய வேண்டும்.

மதுரை தவிர திருச்சி, கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த இரண்டு விமான நிலையங்களும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் சேலம், நெய்வேலி, வேலூர், ராமநாதபுரம், தஞ்சை ஆகிய ஐந்து விமான நிலையங்களை அமைக்கும் மத்திய அரசின் உதான் திட்டம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இதுவரை சேலம் விமான நிலையத்திலிருந்து மட்டுமே விமான சேவை தொடங்கியுள்ளது. மற்ற நகரங்களில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

அதேபோல் தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவும், புதுப்பிக்கவும் மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக விமான நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி பாக்கி ரூ.1,200 கோடிதான்' - மத்திய நிதியமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details