தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகா ஜாலியன் வாலாபாக்! - கொடி சத்தியாகிரகம்

நாட்டின் 75ஆவது சுதந்திர தினமான இன்று, கர்நாடகா ஜாலியன் வாலாபாக் நிகழ்வான விதுராஸ்வதா துப்பாக்கிச் சூடு மற்றும் கர்நாடகா கொடி சத்தியாகிரகம் குறித்து பார்க்கலாம்.

flag Satyagraha in Karnataka
flag Satyagraha in Karnataka

By

Published : Aug 15, 2021, 6:03 AM IST

ஹைதராபாத் : நாட்டு மக்களிடத்தில் விடுதலை உணர்வை விதைக்க காங்கிரஸ் துவாஜ் சத்யாகிரகா என்ற கொடி சத்தியாகிரகம் போராட்டத்தை முன்னெடுத்தது.

அதன்படி நாடு முழுக்க பல்வேறு இடங்களில் மூவர்ணக் கொடி ஏற்ற முடிவெடுக்கப்பட்டது. இதற்கு ஆங்கிலேயர்கள் தடை விதித்திருந்த நிலையிலும், தற்போதைய மண்டியா மாவட்டத்தில் உள்ள சிவபுராவில் மூவர்ணக் கொடி வெற்றிகரமாக ஏற்றப்பட்டது.

கொடி சத்தியாகிரகம்

இந்நிகழ்வு 1938ஆம் ஆண்டு நடந்தது. கொடி சத்தியாகிரகப் போராட்டம் விதுராஸ்வதா மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான விடுதலைப் போராளிகள் கலந்துகொண்டனர்.

அப்போது காவலர்கள் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் விடுதலை வீரர்கள் 32 பேர் தங்களின் இன்னுயிரை நாட்டுக்காக தியாகம் செய்தனர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை

இதனை நினைவு கூரும் வரலாற்று ஆய்வாளர் கங்காதர், “மைசூர் மாகாணத்தில் கொடி சத்தியாகிரகம் போராட்டம் நடைபெறுவது இதுதான் முதல்முறை. ஆங்கிலேயர்கள் தடை விதித்த போதிலும் இந்தப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் விடுதலைப் போராளிகள் பலர் பங்கெடுத்தனர். அப்போது நடந்த அந்நிகழ்வு நாட்டின் விடுதலைப் போராட்டத்தை புரட்டிப்போட்டது” என்றார்.

பஞ்சாப் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கும் விதுராஸ்வதா நிகழ்வுக்கும் இடையே பல்வேறு தொடர்புகள் உள்ளன. ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த 19 ஆண்டுகளுக்கு பிறகு விதுராஸ்வதா சம்பவம் நடைபெற்றது. ஜாலியன் வாலாபாக் மைதானம் போன்று விதுராஸ்வதாவும் குறுகிய வழியை கொண்டது. ஒருமுறை உள்ளே சென்றால், உடனே வெளியேறுவது கடினம்.

விதுராஸ்வதா துப்பாக்கிச் சூடு

இந்நிலையில்தான் காவலர்கள் ஜன்னல் வழியே குறி பார்த்து விடுதலை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் 32 பேர் உயிரிழந்தனர். ஆகையால் பின்னாள்களில் இந்நிகழ்வு கர்நாடக ஜாலியன் வாலாபாக் என்றழைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான செய்திகள் பிபிசி வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டன. அந்நேரம் அண்ணல் காந்தியடிகள் மும்பையில் இருந்தார். ஆகையால் விதுராஸ்வதாவுக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் ஆச்சார்யா கிருபாலனி ஆகியோர் சென்றனர்.

கர்நாடகா ஜாலியன் வாலாபாக்!

ஆங்கிலேய கொடியுடன் காங்கிரஸ் கொடியை ஏற்றிக்கொள்ளலாம் என்ற மிர்சா- பட்டேல் ஒப்பந்தம் ஏற்கனவே அமலில் இருந்தது. எனினும் இந்தப் போராட்டத்தை காங்கிரஸ் முன்னெடுக்க காரணம், மூவர்ணக் கொடி விடுதலை உணர்வாக பார்க்கப்பட்டது. இதன்மூலம் நாட்டு மக்களை ஒன்றுதிரட்ட காங்கிரஸ் நினைத்தது.

காந்தியடிகள் மனமாற்றம்

இது குறித்து பேராசிரியர் கங்காதர் கூறுகையில், “இந்தத் துப்பாக்கிச் சூடு மூலம் காங்கிரஸிற்கு ஒரு விஷயம் தெளிவானது. நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களுடன் நேரடியாக மோத வேண்டும், அதேநேரம் வெள்ளையர்களுக்கு அடிபணிந்துள்ள சமாஸ்தானங்களுக்கு எதிராகவும் போராட வேண்டும் என்று முடிவெடுத்தது.

முதலில் காங்கிரஸ் தலைவர்கள் இந்தப் பரப்புரையை முன்னெடுத்தபோது அண்ணல் காந்தியடிகள் ஆதரவு கொடுக்கவில்லை. மைசூரு மகாராஜா மற்றும் மிர்சா இஸ்மாயில் ஆகியோர் மீது பற்று கொண்டவராகவே காந்தியடிகள் திகழ்ந்தார். எனினும் விதுராஸ்வதா சம்பவத்துக்கு பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்” என்றார்.

விடுதலை போராட்டத்தின் திருப்புமுனை

இதைத் தொடர்ந்து, அண்ணல் காந்தியடிகள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக மட்டுமின்றி, பிரிட்டிஷ் அரசுக்கு அடிபணிந்த சமஸ்தானங்களுக்கு எதிராகவும் நாடு முழுக்க போராட்டத்தை முன்னெடுத்தார். இது ஒரு முக்கியமான திருப்புமுனை. இதற்கு விதுராஸ்வதா சம்பவம்தான் காரணம்!

ABOUT THE AUTHOR

...view details