சென்னை:நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சுமார் 70 ஸ்டார்ட் அப் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் 17 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் சமீபத்தில் கிடைக்கப்பெற்ற தகவல் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 91,000 வேலை வெட்டுக்களை மேற்கொண்டுள்ளன ஸ்டார்ட் அப் நிறுவனங்கள். இந்திய அளவில் சுமார் 98 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி நடத்த உலகளாவிய மையமாக இந்தியா விளங்கி வருகிறது என்ற செய்திகளைப் படித்திருப்போம்.
சீனாவை விட இந்தியாவில் 100 கோடி டாலர் மதிப்புள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உற்பத்தி அதிகரித்தது. இதன் அடிப்படையில் கருத்து தெரிவித்த மத்திய அரசு 2025ஆம் ஆண்டிற்குள் இந்திய அளவில் சுமார் 250 யூனிகார்ன்கள் (ஒரு யூனிகார்ன் என்பது 100 கோடி டாலர் மதிப்புள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கூட்டமைப்பு) தொடங்கப்படும் எனக் கனிப்புகள் வெளியாகின.
இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் சமீப காலமாக இந்திய அளவில் உள்ள ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும், இதனால் செலவு மற்றும் முதலீட்டைக் குறைக்கும் நோக்கத்தில் ஊழியர்கள் பணி நீக்கம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த 2021ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுமார் 3 ஆயிரம் கோடி டாலரை ஈர்த்த நிலையில், 2022ஆம் ஆண்டு அது அப்படியே சரிந்து 2 ஆயிரம் கோடியானது. நடப்பு ஆண்டில் இந்த தொகை ஆயிரத்தில் இருந்து ஆயிரத்து 500 கோடி கூட தாண்டாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவை நாட்டில் தற்போது நிலவும் நிதி நெருக்கடியின் உச்சத்தையே குறிப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிதி நெருக்கடியில் சிக்கிய நிறுவனங்கள் பட்டியலில் ஓயோ, ஓலா, கார்ஸ் 24 மற்றும் உடன் போன்ற பிரபல நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. அது மட்டும் இன்றி அடுத்து வரும் ஆண்டுகளிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடர்ந்து நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் 'ஸ்டார்ட் அப் இந்தியா' முழக்கத்தை முன் மொழிந்து அதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டியது. அதன் அடிப்படையில், இந்தியாவில் 1 லட்சம் யூனிகார்ன்கள் மற்றும் 1 முதல் 2 மில்லியன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கும் திறன் உள்ளது என முழக்கங்களும் வெளியாகின.