டெல்லி :ஒடிசா ரயில் விபத்தில் விபத்து நேரிடுவதற்கு சில விநாடிகளுக்கு முன் பக்க இணைப்பு பாதையில் கோரமண்டல் விரைவு ரயில் 128 கிலோ மீட்டர் வேகத்திலும், பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில் 116 கிலோ மீட்டர் வேகத்திலும் சென்றதாக விசாரணைக் குழு, ரயில்வே வாரியத்திடம் தாக்கல் செய்த முதல் கட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோரில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் உள்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானது, இந்த கோர விபத்தில் 280க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 700க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஒடிசா மாநிலத்திற்கு விரைந்த பிரதமர் மோடி விபத்து ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்தார். மீட்பு பணிகள், விபத்துக்கான காரணம், சீரமைப்பு பணிகள், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விபத்துக்குள்ளான சென்னை கோரமண்டல் விரைவு ரயிலில், ஆயிரத்து 257 முன்பதிவு செய்த பயணிகளும், யஷ்வந்த்பூர் விரைவு ரயிலில் ஆயிரத்து 39 முன்பதிவு பயணிகளும் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.