உத்தரப்பிரதேச மாநிலம், புண்டேல்கண்ட் பகுதியில் ஜான்சி நகரில் கடந்த 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிகப்பிரபலமான கலாசார நடனமான 'மவுனியா' நடனம், அப்பகுதி மக்களால் ஆடப்பட்டது. இந்த நடனத்தை புண்டேல்கண்ட் பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி, அக்டோபர் இறுதி வாரத்திலோ அல்லது நவம்பர் தொடக்கத்திலோ மக்கள் ஆடுகின்றனர். இதன்மூலம் அறுவடையை நல்கிய இயற்கைக்கு 'மவுனியா' நடனம், மூலம் மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
இந்த 'மவுனியா' நடனத்தை ஆடும் மக்கள் கைகளில் நீண்ட குச்சிகளை வைத்துக்கொண்டு, 'டோலக்' என்னும் இசைக்கருவியைக்கொண்டு அடிக்கப்படும் மேளத்திற்கு இணங்க உற்சாகமாக ஆடுகின்றனர்.
இந்த ஆட்டத்திற்கு ஒரு இதிகாச கால கதையும் தொடர்புண்டு. இந்துக் கடவுளான கிருஷ்ணர், எளிய மக்களை பெருமழையில் இருந்து காப்பாற்றவேண்டும் என்பதற்காக கோவர்த்தன மலையை, தன் விரலில் தூக்கியதாக புராணம் கூறுகிறது. அப்போது, அவ்வாறு காக்கப்பட்ட அந்த எளிய மனிதர்கள் வெவ்வேறு வண்ணங்களில் உடையைத் தரித்துக்கொண்டும், மயிலிறகுகளை சுமந்துகொண்டும் அடிக்கப்படும் மேளத்திற்கு ஏற்ப கைகளில் குச்சிகளை வைத்துக்கொண்டு, நடனம் ஆடியுள்ளனர். அதனை நினைவுகூரும் விதமாகவும், பயிர் அறுவடைக்குத் துணை நின்ற இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் 'மவுனியா' நடனம் ஆடப்படுகிறது.
'போடு ரகிட...ரகிட.. ரகிட' - 'மவுனியா' ஆட்டம் ஆடி தெறிக்கவிட்ட உ.பி. மக்கள் இதுகுறித்து மவுனியா நடனத்தை ஆடும் நபர் கூறுகையில், 'இந்த மவுனியா நடனம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் புண்டேல்கண்ட் பகுதியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆட்டம் இதிகாச காலத்தில் பகவான் கிருஷ்ணர் காலந்தொட்டு, ஆடப்பட்டுவருவதாக நம்பப்படுகிறது. இந்த ஆட்டத்தை ஆடும்போது கிருஷ்ணரை நினைவுகூரும்விதமாக,பிரதான கலைஞன் கைகளில் மயிலிறகுகளையும் பிறர் குச்சிகளையும் வைத்திருப்போம்’ என்றார்.
இதையும் படிங்க: நடைசாத்தப்பட்ட கேதர்நாத் ஆலயம்: பனிப்பொழிவில் பக்தர்கள் விளையாடி கொண்டாட்டம்