டெல்லி: இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஒன்றிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் இன்று (ஜூலை.09) செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசுகையில், "கரோனா இரண்டாம் அலை முழுமையாக இன்னும் முடிந்தபாடில்லை. மக்கள் மத்தியின் கரோனா பெருந்தொற்று முடிந்துவிட்டது என்ற தவறான எண்ணம் வந்துவிட்டதா என்பது தெரியவில்லை.
சுற்றுலாத் தளங்களில் மக்கள் முகக்கவசங்கள் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் பலர் சுற்றுவதைக் காண முடிகிறது. இது கரோனா பரவலை அதிகரிக்க வழிவகுக்கிறது.
பிரிட்டன், ரஷ்யா, வங்கதேசத்தில் மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை நாம் கவனித்து வருகிறோம். மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்திட வேண்டும்.