புதுடெல்லி:நேற்று முன்தினம் (ஜூலை 25) நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. குறிப்பாக காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் 4 பேரும் விலைவாசி உயர்வை கண்டிக்கும் வகையிலான பதாகைகளை வைத்து எதிர்ப்பை தெரிவித்ததால், நான்கு எம்பிக்களையும் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
நேற்று (ஜூலை 26) மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதால் திமுக மாநிலங்களவை உறுப்பினர்களான கனிமொழி என்.வி.என்.சோமு, சண்முகம், அப்துல்லா, என்.ஆர்.இளங்கோ, கல்யாணசுந்தரம் மற்றும் கிரிராஜன் ஆகியோர் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களான சுஷ்மிதா சென், மவுஷம் நூர், ஷாந்தா சேத்ரி, அபி ரஞ்சன் பிஷ்வர், நாதிமுல் ஹகியூ, டாக்டர் சாந்தனு சென் மற்றும் டோலா சென் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி.க்களான லிங்கையா யாதவ், ரவிஹந்திரா வாதிராஜூ மற்றும் தாமோதர் ராவ் திவாகொண்டா ஆகியோர் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.