நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
இதனை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் நாளை மாலை 5 மணியிலிருந்து நீட் தேர்வெழுதுவோர் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 198 நகரங்களில் நீட் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. முன்னதாக 155 நகரங்களில் தேர்வு நடத்தப்பட்டது. கரோனா வழிகாட்டுதலின்படி தகுந்த இடைவெளியை உறுதிப்படுத்துவதற்காக தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தேர்வு எழுதும் மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு 3862 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.
இத்தேர்வு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து நடைபெறவுள்ளது. அதன்படி, அனைத்து மையங்களிலும் தேர்வர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என்றும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கண்காணிக்கப்படும் எனவும் தர்மேந்திர பிரதான் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு முன், எம்.பி.பி.எஸ் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை விவரம்