நாலந்தா: பீகார் மாநிலம், மெஹனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஜிதேந்திர குமார். தன் தந்தையின் கடையைக் கவனித்து வருகிறார். சம்பவத்தன்று ஜிதேந்திர குமாரின் கடைக்கு வந்த அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த முராரி குமார், சிகரெட் கடனாக கேட்டதாக கூறப்படுகிறது.
பழைய பாக்கி பணத்தை தந்தால் சிகரெட் கடன் தருவதாக ஜிதேந்திர குமார் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஜிதேந்திராவை மீறி கடையில் இருந்து சிகரெட்டை எடுத்துச் செல்ல முராரி முயன்றதாகவும், அதனால் இருவரிடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சிகரெட் கடன் தராத ஆத்திரத்தில் கடையில் இருந்த கத்தியை எடுத்து ஜிதேந்திர குமாரின் இடது புற கண்ணில் பலமாக குத்திவிட்டு, முராரி தப்பியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஜிதேந்திராவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதற்கட்ட சிகிச்சை முடிந்த நிலையில் ஜிதேந்திர குமார் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜிதேந்திராவை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது இடது கண் பார்வை பறிபோனதாகத் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக ஜிதேந்திராவின் தந்தை அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள முராரி குமாரை வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:ராமர், சீதை சிலை செய்ய நேபாளத்தில் இருந்து உ.பி.க்கு சாளக்கிராம கற்கள் வருகை!