திருவனந்தபுரம்: இயக்குநர் சுதிப்தோ சென் இந்தியில் எழுதி, இயக்கியுள்ள படம் 'The Kerala Story'. ஆதா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் வரும் மே 5ம் தேதி திரைக்கு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் மாயமானது போலவும், பின்னர் அவர்கள் மதம் மாற்றப்பட்டு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கப்பட்டது போன்றும் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மூலம் கேரள மாநிலம் குறித்து அவதூறு பரப்பப்படுவதாக சர்ச்சை வெடித்துள்ளது. வகுப்புவாதத்தை ஊக்குவிக்கும் இப்படத்தை திரையிட மாநில அரசு அனுமதி அளிக்கக் கூடாது என, காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் அரசும் இப்படத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கேரளாவில் அரசியல் ஆதாயம் தேடும் சங்பரிவார்களின் பின்னணியில், இஸ்லாமியர்களை அந்நியப்படுத்தும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மத நல்லிணக்கத்தை அழிக்க முயற்சிக்கும் சங்பரிவார், பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் விஷ விதைகளை விதைக்கிறது. வகுப்பு வாதத்தை ஏற்படுத்தும் சங்பரிவாரின் முயற்சி தொடக்கத்தில் கேரளாவில் எடுபடவில்லை. ஆனால், பிற இடங்களில் அந்த சதி செயலை மேற்கொண்டனர். தற்போது திரைப்படங்கள் மூலம் மீண்டும் முயற்சி செய்கின்றனர்.
எவ்வித ஆதாரமும் இல்லாத போலிக் கதை மூலம் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தால் சமூகத்தில் வகுப்புவாதத்தை ஏற்படுத்தும் முயற்சியை கருத்து சுதந்திரமாக ஏற்றுக்கொள்ள முடியாது. மலையாள மக்கள் இப்படத்தை புறக்கணிக்க வேண்டும். பிரிவினையை ஏற்படுத்தும் நபர்களிடம் மக்கள் விழிப்பாக இருப்பது அவசியம். சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: பாரதிராஜா படத்தின் தழுவலா ஜவான்.? சுவாரஸ்யமான அப்டேட்