பெல்லாரி:கர்நாடக மாநிலத்தில் வரும் 10ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிரப் பரப்புரை செய்து வருகின்றன. பெல்லாரியில் இன்று (மே 5) நடைபெற்ற பாஜக பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
அப்போது அவர் உரையாற்றுகையில், "கர்நாடகாவை முதன்மை மாநிலமாக மாற்ற நாங்கள் தொலை நோக்கு திட்டம் வைத்துள்ளோம். ஆனால், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் வெற்று வாக்குறுதிகள்தான் உள்ளன. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, காங்கிரஸ் ஊழலை மட்டுமே செய்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற பணத்தின் மூலம் தவறான கருத்துகளைப் பரப்புகிறது. பொதுமக்களை தவறாகவும் வழிநடத்துகிறது.
கர்நாடகா முதன்மை மாநிலமாகத் திகழ பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு அவசியமாகிறது. தீவிரவாதம் இல்லாத மாநிலம் உருவாக இவை அனைத்தும் அவசியம். தீவிரவாதத்துக்கு எதிராக பாஜக எப்போதும் கடுமையான நடவடிக்கை எடுக்கும். ஆனால், தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போதெல்லாம், காங்கிரசுக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுகிறது.
வாக்கு வங்கிக்காக தீவிரவாதத்துக்கு காங்கிரஸ் அடிபணிந்து செல்வதைக் கண்டு வியப்பாக உள்ளது. இதுபோன்ற கட்சியால் கர்நாடகாவைப் பாதுகாக்க முடியுமா? காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவில் ஐடி நிறுவனங்கள், விவசாயம், தொழில்துறை, கலாசாரம் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும்.
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தீவிரவாதத்தின் சதித் திட்டத்தை பற்றி எடுத்துரைக்கிறது. தீவிரவாதத்தின் உண்மை மற்றும் அதன் கட்டமைப்பைக் கூறுகிறது. அதனால் தான், தீவிரவாதத்துக்கு துணை புரியும் காங்கிரஸ் இப்படத்தை எதிர்க்கிறது. வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் கட்சி தீவிரவாதத்துக்கு கேடயமாக செயல்படுகிறது.