ஐதராபாத் : 2023 ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் செய்த படமாக தி கேரளா ஸ்டோரி திரைப்படம் உருவெடுத்து வருகிறது.
விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம், தி கேரளா ஸ்டோரி. படம் வெளியாவதற்கு முன் பயங்கர எதிர்ப்புகளைச் சந்தித்தது. கேரள மாநிலம், காசர்கோடு பகுதியில் நர்சிங் கல்லூரியின் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளை ஒரு இஸ்லாமிய பெண் மூளைச் சலவை செய்து இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றி, தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் குழுப்பில் இணைப்பது போன்று தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கதையாக்கப்பட்டு உள்ளது.
இந்த திரைப்படத்தில் அடா சர்மா, சித்னி இட்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். படத்தின் முன்னோட்டம் வெளியானது முதலே நாடு முழுவதும் படத்திற்கான எதிர்ப்பு தீவிரமாக கிளம்பியது. படத்தை தடை செய்யக்கோரி, நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
கேரளாவை கதைக்களமாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை அந்த மாநிலத்திலேயே தடை செய்ய கேரள உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்து விட்டது. தமிழ்நாடு உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களில் படம் வெளியான நிலையில், திரையரங்குகள் முன் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் மல்டிஃபிளெக்ஸ் திரையரங்குகளில் இந்தப் படம் திரையிடுவதை உரிமையாளர்கள் தவிர்த்தனர்.
மேலும் மேற்கு வங்கத்தில், இந்தப் படத்திற்கு மாநில அரசு தடை விதித்தது. வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்க்கவும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்குத் தடை விதிப்பதாக மாநில அரசு விளக்கம் அளித்தது. அதேநேரம் வட மாநிலங்களில் இந்தப் படத்திற்கு தொடர் ஆதரவு குரல்கள் ஒலித்து வருகின்றன.