புதுதில்லி: மக்களவையில் நாளை (03.08.2023) நடைபெற உள்ள நிகழ்வுகளுக்கான பட்டியலில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா (The Digital Personal Data Protection Bill, 2023) உள்ளது. இந்த மசோதா கடந்த ஜூலை 5ம் தேதி மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருந்தது.
டிஜிட்டல் இயங்குதளங்களில் சட்டத்திற்குட்பட்டு தனிநபர் தகவல்களை பயன்படுத்த அனுமதி அளிக்கும் அதே நேரத்தில் தனிநபரின் தரவுகள் மீதான அவரது உரிமையை அங்கீகரிக்கும் வகையில் இந்த புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. தனிநபர் ஒருவரின் தரவுகள் தவறாக பயன்படுத்தப்பட்டால் ரூ.500 கோடி வரையிலும் அபராதம் விதிக்கப்படவும் இம்மசோதாவில் சட்டவாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் தனிநபர் தகவல்கள் டிஜிட்டல் முறையில் நிர்வகிக்ப்படுவதை இந்த சட்ட மசோதா கட்டுப்படுத்தும். நேரடியாக சேகரிக்கப்படும் தனிநபர் தகவல்களும் பின்னாளில் டிஜிட்டல் மயமாக்கப்படும் போது, அதுவும் இந்த சட்ட வரம்பிற்குள் கொண்டு வர வழிவகை உள்ளது. இது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள நபர்களின் தகவல்கள் வெளிநாடுகளில் சேகரிக்கப்படுவதற்கும், நிர்வகிக்கப்படுவதற்கும் சட்ட மசோதாவில் கட்டுப்பாடுகள் உள்ளன.
இம்மசோதாவில் உள்ள அம்சங்கள் முறையாக செயலாக்கம் பெறுவதை உறுதி செய்யும் விதமாக, தரவு பாதுகாப்பு வாரியம் ஒன்று உருவாக்கப்படும். இந்த அமைப்பு மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை சரி செய்யும் வகையில் செயலாற்றும் என தேரிவிக்கப்பட்டுள்ளது.