முதலில் இரண்டு ஆடியோ டேப்கள் வெளியாயின. முதலாவது ஆடியோவில் சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் உள்ள பாஜக தலைவர் முகுல் ராய் என்ற வேட்பாளர் மற்றொரு கட்சி நிர்வாகியுடன் உரையாடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அந்த உரையாடலில், தேர்தலின்போது வாக்குச்சாவடியில் நியமிக்கப்படும் பூத் ஏஜென்ட் தொடர்பான விதிகளை மாற்றுவதற்காகத் தேர்தல் ஆணையத்தை அணுகுவது குறித்துப் பேசிக்கொள்வதாக இருக்கிறது. இன்னொரு ஆடியோவில் மேற்கு வங்க முதலமைச்சர் திருணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, புர்பா மெடினிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியுடன் பேசும் ஆடியோவாகும். இதில் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு உதவும்படி அவரிடம் மம்தா கோரிக்கைவைப்பது இடம்பெற்றுள்ளது.
ஆனால், இந்த ஆடியோக்களின் உண்மைத்தன்மை ஒருபோதும் வெளிவரப்போவதில்லை. இன்னும்கூட இது குறித்து சில இரைச்சல்களை அவை உருவாக்கலாம். ஆனால் இப்போது வந்திருப்பது ஒரு பெரிய வெடிகுண்டு. மார்ச் 28ஆம் தேதி நந்திகிராம் தொகுதியில் உள்ள ரேயாப்ரா பகுதியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, 2007ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி நந்திகிராமில் நடந்த படுகொலைகளின் மூளையாகச் செயல்பட்டவர்கள் சுவேந்து அதிகாரியும் அவரது தந்தையான சிசிர் அதிகாரியும்தான் என்று குற்றஞ்சாட்டினார்.
காவல் துறையினர் நந்திகிராமில் தடைகளை விலக்கிக் கொள்ளும்போது 14 பேர் அப்போது கொல்லப்பட்டனர். சலீம் குழுமம் என்ற இந்தோனேசியாவின் பெருநிறுவனம் முன்னெடுக்கக்கூடிய சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கான (பெட்ரோலியம், வேதிப்பொருள்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம்) நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து கிராம மக்கள் தடை ஏற்படுத்தியிருந்தனர். அப்போது இந்தப் படுகொலைகள் நடைபெற்றன.
“அங்கிருந்த காலணி அணிந்திருந்த சிலர் துப்பாக்கியால் சுட்டனர் என்பது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். அவர்கள் ஹவாய் காலணி அணிந்திருந்தனர். மீண்டும் ஒரு குழப்பத்தை உருவாக்கினார்கள். தந்தை, மகன் இருவரின் அனுமதி இல்லாமல், அந்த நாளில் காவல் துறையினர் நந்திகிராமில் நுழைந்திருக்க முடியாது. இதுதான் உண்மை. இது குறித்து நான் யாரிடம் வேண்டுமானாலும் சாவலுக்கு வரத் தயாராக இருக்கின்றேன். உயர்ந்த இடத்தில் இருந்ததால் இந்த விவகாரத்தில் இதுவே போதுமானது என அதற்குமேல் ஒன்றும் செய்யவில்லை என மம்தா கூறியுள்ளார்.
சுவேந்து அதிகாரி, சிசிர் இருவரும் ஒரு காலத்தில் மம்தாவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள்தான். அவர்கள் குறித்துதான் மம்தா கூறியிருக்கிறார். தேர்தல் வெற்றியை நோக்கமாகக் கொண்ட மம்தாவின் பேச்சு வெளியான உடன், சமூக வலைதளங்களில் வெள்ளம்போல வெளியான செய்திகள், ஊடகங்களில் வெளியான தகவல்களில் ஒரே ஒரு செய்திதான் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தது.
புத்ததேவ் பட்டாசார்யாவின் கஞ்சி போடப்பட்ட மொடமொடப்பான வேட்டியில் இருந்த ரத்தக்கறை இறுதியாகத் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. அவரது வெறுப்புக்குள்ளான மம்தா பானர்ஜியால்தான் இந்தக் கறை அகற்றப்பட்டிருக்கிறது.
14 ஆண்டுகள் கழித்து இந்த உண்மையை திடீரென மம்தா பொதுவெளியில் ஏன் சொன்னார். 40 ஆண்டு கால அரசியல் கால வாழ்க்கையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும்போது மிகவும் முக்கியமாகத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு நான்கு நாள்களே இருக்கும் நிலையில் அவரை எது சொல்லத் தூண்டியது? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றிடம் கொடுப்பதற்காக ஏன் அவர் நந்திகிராமைத் தேர்ந்தெடுத்தார்.
அந்தக் கட்சியில் அவர் எல்லா வளங்களையும் பயன்படுத்தி முயற்சிகள் செய்து பின்னர் வெற்றியை ருசித்தவர். இதே நந்திகிராமில் 2007ஆம் ஆண்டு மேற்குவங்கத்தின் தேர்தல் மேடையில் அவர் உயர்வதற்கு வழி வகுத்ததா நந்திகிராம்? அதற்கான பதில்கள் நந்திகிராமில் வீசும் காற்றில்தான் இருக்கின்றன.
பூர்பா மெடினிபூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் சட்டப்பேரவைத் தொகுதி எப்போதுமே இடதுசாரி கட்சிகளின் வலுவான களமாகும். நந்திகிராம் தொகுதி பிளாக் 1 பிளாக் 2 என இரண்டு பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. இரண்டு பஞ்சாயத்து சமிதிகள் 17 கிராம பஞ்சாயத்துகள் இருக்கின்றன. அருகில் உள்ள தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான ஹால்தியா பிரதிபலிப்பு என்னும் மகிமையில் எப்போதும் நந்திகிராம் திளைத்திருக்கிறது. ஹூக்ளி ஆறு வங்கக் கடலில் கலக்கும் சங்கமத்துக்கு அருகில் அமைந்திருக்கிறது. நந்திகிராமில் 3.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். அதில் 2.70 லட்சம் பேர் வாக்காளர்கள். இதில் 27 விழுக்காடு பேர் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த இஸ்லாமிய வாக்காளர்கள். இதுதான் திருணமூல் தேர்தல் தளகர்த்தாக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.