ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஹயாத் நகரில் உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் ஹரி ராமகிருஷ்ணா. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மனைவி கலால்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றுகிறார். இவர்கள் இருவரும் பயணித்த கார் மோதியதில் இரண்டு வயது பெண் குழந்தை இறந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி கவிதா. தம்பதியருக்கு 7 வயதில் மகனும், 2 வயதில் லட்சுமி என்ற மகளும் உள்ளனர். தங்கள் மாவட்டத்தில் வேலை கிடைக்காமல் ராஜூ தவித்து வந்துள்ளார். இதனால் குடும்பம் வறுமையில் வாடியுள்ளது. 2 குழந்தைகளுடன் அன்றாட பிழைப்பு நடத்தவே மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார் ராஜூ.
இதையடுத்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஹைதராபாத்துக்கு சென்று வேலை தேட முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் 4 பேரும் ஹைதராபாத்துக்கு வந்துள்ளனர். தம்பதியர் இருவருக்கும் கட்டுமான தொழில் செய்யும் வேலை கிடைத்துள்ளது. ஹயாத் நகர் பகுதியில் நடைபெற்ற கட்டுமான பணியில் இருவரும் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நேற்று (மே 24) பிற்பகல் வெயில் சுட்டெரித்ததால் மகள் லட்சுமியை தூக்கிக் கொண்டு நிழல் இருக்கும் பகுதியை தேடியுள்ளார் கவிதா. அப்போது அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங் பகுதியில் சிறிது இடம் இருப்பதை பார்த்துள்ளார். இதைத் தொடர்ந்து அங்கு வந்த கவிதா, தரையில் துணியை விரித்து மகள் லட்சுமியை உறங்க வைத்துள்ளார். குழந்தை தூங்கியதும் கவிதா வேலைக்கு சென்றுவிட்டார்.