ஹைதராபாத்: பார்வையற்ற மூன்று மாத பெண் குழந்தை ஒன்றை, தாயார் கைவிட்டுவிட்ட நிலையில், நிர்மலா என்ற பெண்மணி அவளை தத்தெடுத்துள்ளார். தனக்கு மூன்று குழந்தைகள் இருந்த நிலையில், பார்வையற்ற அந்த குழந்தையைத் தத்தெடுத்தார்.
ஷாலினி என்ற அந்த குழந்தைக்கு நம்பிக்கையூட்டி வளர்த்து, அவளைப் படிக்க வைத்தார். அவளுக்காக பார்வையற்றவர்கள் பழகும் பிரெய்லி மொழியை நிர்மலா கற்றுக்கொண்டார். பார்வையற்ற குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என கற்றுக்கொண்டு, ஷாலினியை வளர்த்தார். கணிதம், அறிவியல், தொழில்நுட்பம் என எல்லா கல்வியையும் ஷாலினிக்கு அறிமுகப்படுத்தினார். கல்வியை மட்டுமல்லாமல் இசை, நடனம், தற்காப்புக்கலை என அனைத்தையும் கற்றுக்கொடுத்தார்.
இதுகுறித்து ஷாலினி கூறுகையில், "அம்மா எனக்கு கொடுத்த தன்னம்பிக்கையை சொற்களில் கூறவிட முடியாது. அவள் கொடுத்த தைரியத்தில் மலையேற்றம் செய்தேன். அந்தமான் நிக்கோபாரில் ஸ்கூபா டைவிங் செய்தேன். ஆறு வயதில் இசைப்பள்ளியில் சேர்ந்தேன். பியானோ, சல்சா கற்றுக்கொண்டேன். 2012இல் சர்வதேச சல்சா போட்டியிலும் பங்கேற்றேன்.
பள்ளிப்படிப்புக்கு பின், அமெரிக்காவில் இளங்கலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சாட் தேர்வில் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றதால், அதன் மூலம் அமெரிக்காவில் உள்ள ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது. 2013இல் படிப்பதற்காக அமெரிக்காவுக்கு தனியாக சென்றபோது, அம்மா கற்றுக் கொடுத்த பாடங்களும், நம்பிக்கையும்தான் என்னுடன் இருந்தது" என்று கூறினார்.