டெல்லி:நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று (நவ.29) தொடங்கிய நிலையில், தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி, சுப்ரியா சுலே, பிரனீத் கவுர், மிமி சக்ரவர்த்தி, நுஸ்ரத் ஜஹான் ரூஹி ஆகிய ஆறு பெண் எம்பிக்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காங்கிரஸ் எம்பி சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
நகைச்சுவையாகப் பதிவிட்ட சசி தரூர்... பொங்கிய நெட்டிசன்கள்
“லோக்சபா கவர்ச்சிகரமான இடம் இல்லை என்று யார் சொன்னது?” என்ற வாசகத்துடன் காங்கிரஸ் எம்பி சசி தரூர் பகிர்ந்த இந்தப் பதிவு ட்விட்டரில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இப்பதிவு பெண்களை போகப்பொருளாக சித்தரிக்கும் வகையிலும், பிற்போக்குத்தனமாகவும் இருப்பதாகக் கூறி நெட்டிசன்கள் பலரும் இன்று காலை முதல் சசி தரூருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
’எம்பிக்கள் போகப்பொருள் அல்ல’
தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா , "நாடாளுமன்றம், அரசியலில் அவர்களின் பங்களிப்பைத் தவிர்த்து, அவர்களை ஈர்ப்புப் பொருளாக மாற்றி இழிவுபடுத்துகிறீர்கள். நாடாளுமன்றத்தில் பெண்களை பிற்போக்குத்தனமாக சித்தரிப்பதை நிறுத்துங்கள்" என ட்வீட் செய்துள்ளார்.
அதேபோல் உச்ச நீதிமன்ற நீதிபதி கருணா நந்தி, சமத்துவம் பேசும் சசி தரூர் போன்றோரும் பெண் எம்பிக்களின் தோற்றத்தைப் பற்றி பேசி அவர்களை சிறுமைப்படுத்தி தன்னை முதன்மைப்படுத்திக் கொள்கின்றனர். இது 2021ஆம் ஆண்டு மக்களே...” என ட்வீட் செய்துள்ளார்.