கோண்டா:இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங், வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பயிற்சியாளர்கள் சிலர் மீதும் பாலியல் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், சரண் சிங் பதவி விலக வேண்டும் என்றும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. அதிலும், பிரியங்கா காந்தி மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் போராட்டக் குழுவினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய சரண் சிங், "மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்காத சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு நன்றி. ஏனென்றால், அவருக்கு உண்மை தெரியும். அவரை எனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும். அவரை விட வயதில் மூத்தவர் நான்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 ஆயிரம் மல்யுத்த வீரர்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் 8 ஆயிரம் பேர் யாதவ சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் சமாஜ்வாதி என்ற குடும்பத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மை தெரியும்” என கூறினார். சரண் சிங் பதவி விலக வேண்டும் என மல்யுத்த வீரர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அதை அவர் திட்டவட்டமாக மறுத்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க:சர்ச்சையைக் கிளப்பிய 'The Kerala Story' டிரெய்லர்: கேரளாவை பற்றி அவதூறு? கொந்தளித்த பினராயி விஜயன்!