தானே: மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தானே மாவட்டத்தின் கல்வா பகுதியில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை நிர்வாகத்தில் நிலவி வரும் குழப்பம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அங்கு 12 மணிநேரத்தில் 17 நோயாளிகள் மரணம் அடைந்து உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
17 நோயாளிகள் உயிரிழந்த சம்பவத்தை, மருத்துவமனை நிர்வாகமும் உறுதி செய்து உள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 80 வயதைக் கடந்தவர்கள் என்றும், அவர்கள் மற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் கைவிட்ட நிலையில், இறுதியாக, இங்கே வந்ததாக, தெரிவித்து உள்ளது.
கல்வா பகுதியில் இயங்கி வந்த பொது மருத்துவமனை சமீபத்தில் மூடப்பட்ட நிலையில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தில் நிலவி வரும் குழப்பங்கள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை, மருத்துவ வசதிகள் வழங்குவதில் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால், இந்த துயர சம்பவம் நடைபெற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தானே தொகுதி, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் பலம் வாய்ந்த தொகுதி ஆகும். அவரது தொகுதியில் உள்ள மருத்துவமனையில், 12 மணிநேரத்தில் 17 நோயாளிகள் மரணம் அடைந்து உள்ள சம்பவம், அவருக்கு பெரும் தலைவலி ஆக அமைந்து உள்ளது.