டெல்லி: மக்களவையில் இன்று(பிப்.13) நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதத்தின்போது, தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், ஜம்மு- காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து பேசினார். அப்போது, "மத்திய அரசு 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தால் அம்மக்கள் மிகுந்தப் பாதிப்புக்குள்ளாகிவருகின்றனர்.
அவர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு, உரிமைகள் நசுக்கப்படுகின்றன. ஜம்மு- காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றிய பிறகு குடிமைப்பணிகளுக்குத் தேவையான அலுவலர்களுக்கு யூனியன் பிரதேசத்தில் மிகப்பெரிய பற்றாக்குறை நிலவுகிறது என, ஜம்மு- காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2021ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவா உள்ளிட்ட யூனியன் பிரதேசத்தில் இருந்து அலுவலர்கள் அங்கு பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா என பேசும் நீங்கள்?(மத்திய அரசு) ஏன் கூடுதல் முக்கியத்துவத்தை கொடுத்து குடிமைப்பணிகளில் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்களைப் பணியமர்த்தக்கூடாது. இந்த அணுகுமுறையுடன் பாஜக அரசு நடந்துகொண்டால் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தோல்வியைச் சந்திப்பார்கள்.