ஹைதராபாத்:சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை, லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அந்தந்த அணிகள் பெற்றுள்ள வெற்றி சதவீதம் மற்றும் புள்ளிகள் அடிப்படையில், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 66.66 புள்ளிகளும், இந்திய அணி 58.79 புள்ளிகளும் பெற்றுள்ளன.
தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றன. அகமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
அதேநேரம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவது இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முடிவுக்காக காத்திருக்க நேரிட்டது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.
பலம்... பலவீனம்...ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்து, 9 நாட்களுக்கு பிறகு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்குகிறது. நடுவரிசை ஆட்டக்காரரான விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி, விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் ஃபார்முக்கு திரும்பியிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய சுப்மன் கில் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துகிறார்.
கேப்டன் ரோஹித் சர்மா, புஜாரா, ஜடேஜா, அஸ்வின், அக்சர் படேல் ஆகியோரும் தங்கள் பங்குக்கு திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். கார் விபத்தில் காயம் அடைந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அணியில் இல்லாதது பலவீனமாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் செய்து வரும் ஸ்ரீகர் பரத், பேட்டிங்கில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறாததால், உமேஷ் யாதவ், சிராஜ், ஷமி ஆகியோரை மட்டுமே இந்திய அணி நம்பியுள்ளது.