அகமதாபாத்:இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 480 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.
3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி 4ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. 16 ரன்கள் எடுத்திருந்த ஜடேஜா, கூடுதலாக 12 ரன்கள் சேர்த்து 28 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் விராட் கோலியுடன் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 44 ரன்கள் எடுத்திருந்த போது லயன் பந்துவீச்சில் பரத் ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும்.
மறுமுனையில் பொறுமையாக விளையாடிய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். டெஸ்ட் போட்டியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் அடிக்கும் சதம் இதுவாகும். கடைசியாக 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலி சதம் அடித்திருந்தார். 1,205 நாட்களுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 28வது சதத்தை அவர் எட்டியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 8வது சதத்தை பதிவு செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கோலிக்கு இது 75வது சதம் ஆகும். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.