டெல்லி: உலகின் பெரும் செல்வந்தரான எலான் மஸ்கிற்கு சொந்தமான நிறுவனம் தான் டெஸ்லா. எலக்ட்ரிக் கார், சோலார் பேனல்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. எனினும் கார் தயாரிப்பில் தீவிரம் காட்டும் டெஸ்லா நிறுவனம் மாடல் S, மாடல் 3, X, Y, ஆகிய ரக கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த கார்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் உலகளவில் மாடல் Y ரக கார், அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஜாட்டோ டைனமிக்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2023 காலாண்டில் 2 லட்சத்து 67,200 'டெஸ்லா மாடல் Y' கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் 2,56,400 டொயோட்டா கொரேல்லா நிறுவன கார்களும், 2,14,700 RAV 4 நிறுவன கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற வாகன தயாரிப்பு நிறுவனங்களை விட, அதிகமான கார்களை விற்பனை செய்து அமெரிக்காவில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளுடன் எலக்ட்ரிக் கார் விற்பனை சந்தையில் முன்னணியில் இருப்பதாக டெஸ்லா நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் அனைத்து அமெரிக்க பயணிகள் வாகன விற்பனையில் எலக்ட்ரிக் கார் விற்பனை 7 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் என கவுண்டர் பாயிண்ட் ஆய்வில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.