பாரமுல்லா:வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் திவான் பாக் பகுதியில் உள்ள புதிய மதுபானக் கடை மீது நேற்று மாலை பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 52 வயதான ரஞ்சித் சிங் என்பவர் உயிரிழந்தார்.
இதில் மூவர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயம் அடைந்தவர்கள் கத்துவா பகுதியைச் சேர்ந்த கோவிந்தர் சிங் (35), ரவி குமார் (36), ரஜௌரி மாவட்டத்தை சேர்ந்த கோவிந்த் சிங் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில், கோவிந்த சிங்கின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால், அவர் உயர் சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதுசம்பவம் குறித்து, காஷ்மீர் மண்டல காவல் துறை தனது ட்விட்டர் பக்கத்தில்,"பாரமுல்லா மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மதுபானக் கடை மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசியுள்ளனர்.
இதில், அங்கு பணிபுரியும் நான்கு பேர் காயம் அடைந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நால்வரும் ஜம்முவைச் சேர்ந்தவர்கள். குற்றவாளிகளை பிடிக்க அப்பகுதி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது" என பதிவிட்டுள்ளது.
மேலும், காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரு சக்கர வாகனம் ஒன்றில் இரண்டு நபர்கள் வந்துள்ளனர். அதில், புர்கா அணிந்து வந்த ஒருவர் மதுபான கடையின் ஜன்னல் துளை வழியாக, உள்ளே கையெறி குண்டை வீசியுள்ளார். தாக்குதலை தொடர்ந்து அவர்கள் அந்த வாகனத்திலேயே தப்பித்து சென்றுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறை உயர் அதிகாரிகள் அப்பகுதி முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கேதார்நாத், பத்ரிநாத்தில் பாறைகள் உருண்டு நிலச்சரிவு; பாதை தடைபட்டதால் பக்தர்கள் அவதி!