பூஞ்ச் : ஜம்மு காஷ்மீர், பூஞ்ச் மாவட்டம் தனமண்டி - சூரான்கோட் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல் அடுத்து இந்திய ராணுவம், உள்ளூர் பாதுகாப்பு படையுடன் இணைந்து கூட்டு ஆபரேஷனில் ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில், பயங்கரவாதிகள் வேட்டையில் ஈடுபட்டு உள்ள ராணுவ வீரர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் கூடுதல் வீரர்கள் இந்திய ராணுவத்தின் ஜிப்ஸி மற்றும் டிரக் ஆகிய வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.
அப்போது, மறைந்து இருந்து பயங்கரவாதிகள் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற இரண்டு வாகனத்தின் மீது கண்மூடித்தன துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ராணுவ வீரர்கள் சிலர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். சந்தேகத்திற்குரிய இடத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.