திருவனந்தபுரம்:கேரளாவில் ஆளும் சிபிஐ(எம்) கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று (ஜூன் 30) இரவு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு வீசிய சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஏகேஜி மையத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிலர் இருந்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் இரவு 11.30 மணி அளவில் கட்டடத்திற்கு வெளியே பயங்கரமான வெடிச்சத்தம் கேட்டதாக கூறினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்தினர். மேலும் உயர் அதிகாரிகள் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்து, சிசிடிவி கேமராக்களை சோதித்து பார்த்தனர். தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
AKG சென்டரின் அதிகாரபூர்வ ஊடகக் குழு சிபிஐ(எம்) வெளியிட்ட CCTV காட்சியில் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு வந்த ஒரு நபர் கட்டடத்தின் மீது "வெடிகுண்டை" வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. வெடிகுண்டு ஏகேஜி மையத்தின் கல் சுவரில் பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மூத்த சிபிஐ(எம்) தலைவரும், இடது சாரி ஒருங்கிணைப்பாளருமான EP ஜெயராஜன் சிபிஐ(எம்) தொண்டர்கள் அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். மேலும் இதில் காங்கிரஸ் கட்சி தொடர்பு இருப்பதாக சிபிஐ(எம்) தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.