கரோனா தொற்று ஊரடங்கு அமலில் இருந்தபோது குடிபெயர் தொழிலாளர்கள் பணமின்றி உணவின்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்குப் பலரும் உதவ முன்வந்தாலும் பாலிவுட் நடிகர் சோனு சூட் களத்தில் இறங்கி தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப உதவிக்கரம் நீட்டினார்.
மேலும் பசியால் தவித்த ஏழை மக்களுக்கும் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவந்தார். அவரது இச்செயலைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். ஊரடங்குத் தளர்வுகளை அரசு அறிவித்தாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சோனு சூட் முடிந்த உதவிகளைச் செய்துவந்தார்.
அவரது இந்த நற்செயல்களைப் பாராட்டும்விதமாகவும், நன்றி தெரிவிக்கும்விதமாகவும் தெலங்கானா மாநிலம் சித்திபெட் மாவட்டத்தில் உள்ள டுப்பா தண்டா கிராம கோயில் ஒன்றைக் கட்டியுள்ளனர்.
மக்கள் நாயகனுக்காக மக்கள் எழுப்பிய கோயில் நேற்று (டிச. 20) கிராம மக்கள் முன்னிலையில் திறக்கப்பட்ட கோயிலில் சோனு சூட்டின் சிலை நிறுவப்பட்டிருந்தது. கோயிலுக்குப் பாரம்பரிய உடையில் வந்திருந்த பெண்கள், நாட்டுப்புறப் பாடல் பாடி சோனு சூட்டின் சிலைக்கு ஆரத்தி எடுத்தனர். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க... சோனு சூட் இனி பஞ்சாப்பின் அடையாளம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு