தெலங்கானா:தெலங்கானாவில் ஜெய்சங்கர் பூபல்லி மாவட்டத்தில், மெடிகட்டா என்ற இடத்தில், கோதாவரி நதியுடன் மூன்று துணை நதிகள் இணைகின்றன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த இடத்தில்தான் கல்லணை காலேஸ்வரம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இத்திட்டத்திற்கு கடந்த 2016ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. மாநிலத்தின் 70 சதவீத பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் நோக்கத்திலேயே இந்த நீர்ப்பாசனத் திட்டம் தொடங்கப்பட்டது. சுமார் 80,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காலேஸ்வரம் அணை கட்டப்பட்டது. இதற்காக 1,832 கிலோ மீட்டர் தொலைவிற்கு கால்வாய்கள், குழாய்கள், சுரங்கங்கள் அமைக்கப்பட்டன. சுமார் 203 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கப்பட்டது.
இந்த நீர்ப்பாசனத் திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் தற்போது, ஆண்டுக்கு பல லட்சம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர்ப் பாசனமும், ஆண்டு முழுவதும் பொதுமக்களுக்கு குடிநீரும் வழங்கப்படுகிறது. இத்திட்டம் உலகின் மிக நீளமான மற்றும் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டம் என்று கருதப்படுகிறது.
காலேஸ்வரம் அணை அதன் அளவில் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது. இதில், கோதாவரி நதியில் ’கிராவிட்டி கேணல்’ எனப்படும் கால்வாய்கள் மற்றும் டனல்கள் கட்டப்பட்டுள்ளன. இறைவை தொழில்நுட்பம் மூலம் கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மெடிகடா என்ற இடத்தில் இருந்து தினமும் 2 டிஎம்சி தண்ணீரை இறைத்து, போச்சம்மா சாகர் அணையில் சேர்க்கிறது.