ஹைதராபாத்: தெலுங்கானா அரசியல் களத்தில் தற்போது மீண்டும் மத்திய புலனாய்வு அமைப்புகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமலாக்கத்துறையை (Enforcement Directorate) தொடர்ந்து தற்போது ஹைதராபாத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் பிஆர்எஸ் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு சொந்தமான இடங்களில் காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்பி, எம்எல்ஏக்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் வரி செலுத்தியது குறித்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தெலங்கானா முழுவதும் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை தொடர்கிறது. சுமார் 50 ஐடி குழுக்கள் காலை முதல் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றன. ஹைதராபாத்தில் பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த மேடக் எம்பி கோட்டா பிரபாகர் ரெட்டி, எம்எல்ஏக்கள் மர்ரி ஜனார்த்தன் ரெட்டி (நாகர்கர்னூல்), பைலா சேகர் ரெட்டி (புவனகிரி) ஆகியோரின் வீடுகளில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் சாலை எண் 36ல் உள்ள மர்ரி ஜனார்த்தன் ரெட்டியின் வீட்டிற்கு ஐடி அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். மேலும் குகட்பல்லியில் உள்ள ஜனார்த்தன் ரெட்டிக்கு சொந்தமான ஜேசி பிரதர்ஸ் வணிக வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், கொத்தபேட்டாவில் உள்ள பைலா சேகர் ரெட்டியின் வீட்டில் சோதனை நடத்தி வரும் ஐடி அதிகாரிகள், வரி செலுத்தியது தொடர்பான பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். மறுபுறம், நகரில் உள்ள பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.