ஹைதராபாத்: தெலங்கானா தமிழ்ச் சங்கம் சார்பில் இணையம் வழியாக தமிழ் கற்பித்தல் வகுப்புகள் நடைபெறுகின்றன.
பணிகள் காரணமாக தமிழ்நாட்டிலிருந்து தெலங்கானா மாநிலத்தில் குடியேறி வசித்து வரும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கும் நோக்கத்தில், இணையவழி கற்பிக்கும் முயற்சியை தெலங்கானா தமிழ்ச் சங்கம் எடுத்துள்ளது. இதற்காக இணையம் வழியாக தமிழ் வகுப்புகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழ் மொழியை கற்க பலரும் விருப்பம் தெரிவித்து, ஆர்வமுடன் முன்பதிவு செய்தனர். இந்த இணையவழி தமிழ் கற்பித்தல் வகுப்புகளுக்கான தொடக்க நிகழ்வு கடந்த மாதம் 15ஆம் தேதி, கூகுள் மீட் செயலி மூலமாக நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், தெலங்கானா தமிழ்ச் சங்க தலைவர் போஸ் வரவேற்று பேசினார். ஹைதராபாத் திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்தப் பயிற்சி மையம், சித்தாந்த வித்யா நிதி பேராசிரியர் கோ. முத்துசுவாமி, (கவிஞர் சின்மய சுந்தரன்), ஹைதராபாத் நிறை இலக்கிய வட்ட பட்டிமன்ற தலைவர் ஸ்ரீனிவாசன், திருவையாறு ஔவை கோட்டம் மற்றும் தமிழ் ஐயா கல்வி கழக தலைவர் முனைவர் கலைவேந்தன், கோவை வசந்த வாசல் கவிமன்ற செயலாளர் கோகுலன், அகமதாபாத் தமிழ்ச் சங்க இணைச் செயலாளர் வாலறிவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.