ஹைதராபாத்:தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் கே.சி.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தெலங்கானா அரசின் தலைமைச் செயலாளர், தெலங்கானா அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் 7 மசோதாக்கள் மற்றும் கடந்த மாதம் முதல் 3 மசோதாக்கள் என மொத்தம் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், தெலங்கானா ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதிநிதிகள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவில், ஆளுநரின் செயலாளர் மற்றும் மத்திய சட்டத்துறையின் செயலாளர் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 2022 செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதில் ஜிஎஸ்டி சட்டத்திருத்த மசோதாவுக்கு மட்டும் அம்மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் வழங்கி உள்ளார்.