ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் 119 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டதில் இருந்து 10 ஆண்டுகளாக கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.
பிஆர்எஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் எனக் காங்கிரசும், பாஜகவும் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளன. மேலும், தெலங்கானா ராஷ்டிர சமிதி என இருந்த தனது கட்சியின் பெயரை மாநிலம் தாண்டி தேசிய அரசியலிலும் ஈடுபட வேண்டும் என விரும்பியதால் சந்திரசேகர ராவ் பாரத ராஷ்டிர சமிதி என மாற்றி இருந்தார். இந்த தேர்தலிலும் தெலங்கானாவில் கேசிஆர் ஆட்சி அமைக்கும் பட்சத்தில், பாஜக, காங்கிரஸ் எனத் தேசிய கட்சிகளால் அசைக்க முடியாத கட்சி பிஆர்எஸ் என்ற பிம்பம் மக்கள் மத்தியில் ஏற்படும்.
இதனால், இதனால் தெலங்கானா தேர்தல் வெற்றி கேசிஆரின் தேசிய அரசியலுக்கான வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் கர்நாடகா தேர்தலில் அடைந்த தோல்வி மூலம் தென் மாநிலங்களில் தனது இருப்பை காட்டிக்கொள்ள பாஜகவிற்கு தெலங்கானா தேர்தல் முக்கியமானதாக உள்ளது. அதனால் இம்முறை தெலங்கானா தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.
119 தொகுதிகளுக்கு 2 ஆயிரத்து 290 வேட்பாளர்கள் போட்டியிடும் தெலங்கானா சட்டசபைத் தேர்தல் இன்று (நவ.30) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். கிராமப்புறம், மற்றும் நகர்ப்புறத்திலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். மேலும், முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்களும் ஆட்சியைத் தேர்ந்தெடுப்பதில் தங்களின் பங்கும் இருக்க வேண்டும் என ஆர்வமுடன் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
மேலும், தேர்தல்களில் பிரபலங்கள் வாக்களிப்பது மக்களின் கவனத்தைப் பெறும். அதேபோல் தெலங்கானா தேர்தலிலும் நடிகர், நடிகைகள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹைதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் அவரது குடும்பத்தினர் சகிதம் வந்து வாக்களித்தார்.