ஹைதராபாத்:தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக,கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக, இரு மாநிலங்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்கள் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது. தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை, அங்குக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ள நிலையில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடற்கரை ஒட்டிய வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டு உள்ளது. இதன் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது
தெலங்கானா மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதிகபட்சமாக முலுகு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 64.9 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சித்யாலா மண்டலத்தின் ஜெய்சங்கர் பூபாலப்பள்ளியில் 61.6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தின் கோதாவரி ஆற்றின் கிளை நதி ஆக விளங்கும் காடேம் ஆற்றில் செயல்படுத்தப்படும் 700 அடி கொள்ளளவிலான காடேம் திட்டத்தில், தற்போது 699.5 அடி அளவிற்குத் தண்ணீர் அதிகரித்து உள்ளது. அணையிலிருந்து, நீர் திறக்க 16 மதகுகள் உள்ள நிலையில், அதில் 4 மதகுகள் திறக்க முடியாததால், அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
கம்மாம் மாவட்டத்தின் வைகுந்த தாமம் பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் மூழ்கி உள்ள சிவன் கோயில் பத்ராசலம் பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில் 48 அடி அளவிற்கு நீர் பாய்ந்து வருவதால், இரண்டாம் கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:தெலங்கானா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதன் காரணமாக, அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஜுலை 28ஆம் தேதி மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: தெலங்கானாவில் அடுத்தடுத்து காத்திருக்கும் கனமழை.. மழை நேரத்தில் துணியை காய வைப்பது எப்படி?