ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் மல்காஜ்கிரி மாவட்ட சிறப்பு புலனாய்வு குழுவிற்கு, கைரேகை அறுவை சிகிச்சை மோசடியில் ஈடுபடும் கும்பல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. அந்த கும்பல் அன்னோஜிகூடாவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் காட்கேசர் போலீசாரும், சிறப்பு புலனாய்வு குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகிக்கக்கூடிய வகையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். முதல்கட்ட தகவலில் அவர்கள் கஜ்ஜலகோண்டுகரி நாக முனேஸ்வர ரெட்டி, சகபாலா வெங்கட ரமணா, போவில்லா சிவ சங்கர் ரெட்டி, ரெண்டலா ராம கிருஷ்ணா ரெட்டி என்று அடையாளம் காணப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை:
- அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கையுறைகள் - 8
- சிப்லாடின் ஆயின்ட்மெண்ட் (20 கி) -3
- அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் டேப் - 3
- அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் பிளேட் - 14
- லிக்னோகைன் ஹைட்ரோகுளோரைடு ஜெல் எனப்படும் மயக்க மருந்து (30 கி) - 2
- லிக்னோகைன் ஹைட்ரோகுளோரைடு ஊசிக்கான மருந்து (30 மில்லி) - 1
- தையலுக்கு பயன்படுத்தப்பட உள்ள நூல்கள் - 1 பாக்கெட்
- அறுவைசிகிச்சைக்கு பயன்படுத்தும் பஞ்சுகள் - 8 பாக்கெட்டுகள்
- ஊசி - 8
- பிளேட் உபயோகப்படுத்த தேவைப்படும் கைப்பிடி - 1
- சோடியம் குளோரைட் கரைச்சல் (500 மில்லி) - பாட்டில்
- பெக்டோடைன் கரைச்சல் - 1
- கத்தரிக்கோல் - 4
- செல்போன் - 4 (ஓப்போ - 2, விவோ, ரெட்மி)
இந்த வழக்கில் முனேஸ்வர ரெட்டி முதல் குற்றவாளியாகவும், வெங்கட ரமணா 2ஆவது குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டனர். சங்கர ரெட்டி, கிருஷ்ண ரெட்டி ஆகியோர் முறையே 3ஆவது, 4ஆவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் குற்றவாளியான முனேஸ்வர ரெட்டி, ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் CRA (Certificate in Radiological Analysis) என்னும் மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த படிப்பை திருப்பதியில் முடித்துள்ளார். 2007ஆம் படிப்பை முடித்த இவர், திருப்பதியிலேயே கிருஷ்ணா டயக்னோஸ்டிக்ஸ் என்ற மருத்துவ பரிசோதனை மையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவரது பள்ளிப்பருவ நண்பரும், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவருமான வெங்கட ரமாணா மருத்துவமனைகளில் மயக்க மருந்தை கையாளும் பணியாளராக இருந்துள்ளார்.
விசா நடைமுறையில் இருந்த ஓட்டை:அப்போது வெங்கட ரமணா மூலம், முனேஸ்வர ரெட்டிக்கு கடாப்பாவை சேர்ந்த ஒருவரின் அறிமுகம் ஏற்படுகிறது. அந்த நபர், குவைத்தில் இருந்து இந்தியா வந்தவர். விசா தேதி முடிந்தும் நீண்ட நாள்களாக அங்கிருந்தால் குவைத் அரசால் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்.